ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்தது ஈரான்! சரிந்த வேகத்தில் மீண்டும் எகிறும் மசகு எண்ணெய் விலை
அமெரிக்காவுடன் எவ்விதப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பு எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட ஒரு “போலிச் செய்தி” (Fake News) என்றும் ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Qalibaf) இதனைத் தனது ‘எக்ஸ்’ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தை குறித்த ட்ரம்ப்பின் கருத்தை ஈரானிய வெளிவிவகார அமைச்சு “உளவியல் போர்” என வர்ணித்துள்ளது.
இந்தத் தெளிவற்ற அரசியல் சூழலால், நேற்று 10 சதவீதத்திற்கும் மேல் சரிந்திருந்த மசகு எண்ணெய் விலை இன்று காலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. ஆசிய சந்தைகளில் இன்று காலை நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 103.69 டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், நைமெக்ஸ் (NYMEX) மசகு எண்ணெய் விலையும் 3.42 சதவீதம் அதிகரித்து 91.55 டொலராக உயர்ந்துள்ளது.
ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தபோது, சமாதானம் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையில் விலைகள் வேகமாகச் சரிந்தன.
ஆனால், தற்போது ஈரான் அதனை மறுத்துள்ளதோடு, 77ஆவது கட்டத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால் சந்தையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை முடக்கம் தொடர்வதால், வரும் நாட்களில் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





