மயக்கமுற்ற மாணவனுக்கு முதலுதவி செய்ய மறுத்த தாதியர்கள் – “எங்களுக்குப் பொறுப்பில்லை” என அலட்சியப் பேச்சு!
Updated
இந்நிலையில், மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
யாழ். இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (26.03.2026) வியாழக்கிழமை திடீரென மயக்கமுற்ற மாணவன் ஒருவன், அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அங்கு வைத்தியர் எவரும் இல்லை என்றும், மதியம் இரண்டு மணிக்கு பின்னரே வைத்தியர் வருவார் என்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
இதனால் மயக்கமடைந்த மாணவனை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் வைத்தியசாலை வாசலிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
மாணவனின் உடல்நிலையைக் கருதி முதலுதவி செய்யுமாறு ஆசிரியர்கள் கோரியபோது, “மாணவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தம்மால் பொறுப்பேற்க முடியாது” எனக் கூறி தாதியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர்.
மேலும், மாணவனை வேறு வைத்தியசாலைக்கு அனுப்ப நோயாளர் காவு வண்டி (Ambulance) ஒன்றையாவது ஏற்பாடு செய்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும், “எங்களிடம் வண்டி இல்லை, வேறு வண்டிகளும் வராது” என மிகவும் சாதாரணமாகக் கூறி நிராகரித்துள்ளனர்.
வேறு வழியின்றி, மயக்கமுற்ற மாணவனை ஆசிரியர்களே தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் இவ்வாறான பொறுப்பற்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை வைத்தியசாலையின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





