அரசாங்கம் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டது: நாமல் ராஜபக்ச காட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் அடுக்கடுக்கான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கடுமையாகச் சாடினார்.
அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர், அரசாங்கத்தின் நட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்கள் மீதே சுமத்தப்படுகின்றன என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக எரிபொருள் விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம் சாட்டினார். 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறிவிட்டு, தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்நாட்டு விவசாயத்தை வலுப்படுத்துவதை விடுத்து, இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் கலாச்சாரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதால் கிராமப்புறங்களில் உரத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகக் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ச, ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
பழைய அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுத் தனது தோல்விகளை மறைக்க முயலக் கூடாது என்றும், ஒரு அணியாக நாட்டுக்காக வேலை செய்யத் தவறியதே இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் அவர் வலியுறுத்தினார்.




