80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!
அமெரிக்க கடற்படையின் மிகவும் சக்திவாய்ந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களில் ஒன்றான USS George H.W. Bush தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களைச் சுமந்து செல்லக்கூடிய இந்த ‘மிதக்கும் விமானத் தளம்’, ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கண்காணிப்புப் பணிகளைப் பாரியளவில் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தனது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ள இக்கப்பல், ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் இணையவுள்ளது.
விமானம் தாங்கிப் போர்க்கப்பலுடன் இணைந்து, அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்களான USS Donald Cook மற்றும் USS Mason ஆகியவையும் இந்த வாரமே அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டுள்ளன. இவை ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவை.
அத்துடன், USS Ross என்ற மற்றொரு ஏவுகணை அழிப்புக் கப்பலும் இரகசிய இடத்தைப் பூர்வாங்கமாக கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய கடற்படை நகர்வு ஈரானியக் கடற்படைக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் இந்த புதிய படையணி பெரும் உதவியாக இருக்கும் என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பாரசீக வளைகுடா பகுதி தற்போது ஒரு மிகப்பெரிய போர்க்களமாக உருவெடுத்துள்ளது.





