இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொது அமைதியைப் பேணுதல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், அத்தியாவசிய சேவைகளை உறுதிப்படுத்தவும் அவசரகாலச் சட்டம் அவசியமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சேவைகள் இதற்கமைய அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அவசரகால அதிகாரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யவும், சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையின்றி நிவாரணங்களை வழங்கவுமே இந்த விசேட அதிகாரங்கள் பயன்படுத்தப்படும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




