இன்று நள்ளிரவு முதல் கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் உயர்வு!
இலங்கையில் நாளை முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தவிர, சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயினாலும், ஒரு கோப்பை தேநீர் மற்றும் பால்மா தேநீர் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன், உணவகங்கள் இயங்கும் இடங்களில் மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டுவதால், புதிய மின்கட்டணத் திருத்தத்தின்படி 25 சதவீத மேலதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதீத செலவீனத்தைச் சமாளித்து உணவகங்களைத் தொடர்ந்து நடத்துவதற்காகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் மின்கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண மக்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும் என அஞ்சப்படுகிறது.
மின்சாரக் கட்டணம் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வர்த்தக நிலையங்களுக்குப் பாரிய சுமை ஏற்பட்டுள்ளதே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.




