ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!
ஈரானின் சில முக்கியத் தலைவர்கள் அமெரிக்காவிடம் பொய் சொல்லி, பேச்சுவார்த்தைகளைத் திட்டமிட்டு இழுத்தடித்த காரணத்தினாலேயே அவர்கள் இன்று பூமியில் இல்லை என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச நிபந்தனைகளை ஈரான் நிராகரித்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி அறிக்கை வௌியாகியுள்ளது. இது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிடம் பொய் சொல்லி எங்களை ஏமாற்றுவதை ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்; அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டனர்” என லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தனிப்பட்ட வாக்குறுதிகள் இனிச் சோதிக்கப்படும் என்றும், எமது நிபந்தனைகளுக்கு அவர்கள் உண்மையாக இருக்கத் தவறினால் அவர்கள் சந்திக்கப்போகும் இராணுவ விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை என ஈரான் கூறினாலும், திரைக்குப் பின்னால் சாதகமான அறிகுறிகள் தென்படுவதாக லீவிட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா பேரழிவை ஏற்படுத்தும் போர்த் திறனுடன் மிகவும் தீவிரமான, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது என்றும், திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





