120 அடி பள்ளத்தில் விழுந்த வேன்! நள்ளிரவில் குடும்பத்தை மீட்ட 12 வயது சிறுவன்
நுவரெலியா – தவலந்தென்ன வீதியில் ரம்பொடை கெரண்டி எல்ல பகுதியில், கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 120 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
கொத்மலை காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் 6ஆம் தரம் பயிலும் 12 வயது சிறுவன் ஹிரந்த சமரகோன், தானும் காயமடைந்திருந்த போதிலும் மனத்திடம் குறையாமல் செயற்பட்டுள்ளார்.
நள்ளிரவில் இருளையும் பாராமல், செங்குத்தான பள்ளத்திலிருந்து மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கடும் சிரமத்திற்கு மத்தியில் வீதிக்கு மேலே ஏறி வந்துள்ளார். வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்தி, லொறி ஊழியர்கள் மூலம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கித் தனது குடும்பத்தினரைக் காப்பாற்றியுள்ளார்.
சிறுவனின் துரித செயற்பாட்டால் காயமடைந்த அவனது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் மீட்கப்பட்டு, தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





