அமெரிக்காவின் B-21 ரக விமானங்களை அழிக்கும் திறன் எங்களிடம் உண்டு – ரஷ்யா பகிரங்க அறிவிப்பு!
உலகின் அதிநவீன ‘ஸ்டெல்த்’ (Stealth) ரகப் போர் விமானங்களான F-22 மற்றும் F-35 ஆகியவற்றை எளிதில் கண்டறிந்து அழிக்கும் திறன் ரஷ்யாவின் புதிய S-500 புரோமிதியஸ் வான் பாதுகாப்பு அமைப்பிற்கு உண்டு என மொஸ்கோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரேடார்களில் சிக்காத அமெரிக்காவின் பிரம்மாண்ட B-21 ரக விமானங்களையும் இது துல்லியமாகத் தாக்கும் என ரஷ்யா மிரட்டியுள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட அதிநவீன ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத விமானங்களையும் ரஷ்யா இனி வேட்டையாடப் போகிறது.
சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த S-500 அமைப்பு, ஹைப்பர்சோனிக் வேகத்தில் வரும் ஏவுகணைகளையும் இடைமறிக்கும் திறன் கொண்டது.
வான்பரப்பில் ஆதிக்கத்தை நிலைநாட்ட ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நகர்வு, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் வான்வழி நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஆயுதச் சந்தையில் தனது இராணுவ பலத்தை நிரூபிக்க ரஷ்யா இந்த ஆயுதத்தை முன்னிறுத்தி வருகிறது.
இருப்பினும், ரஷ்யாவின் இந்த அறிவிப்பை மேற்கத்திய இராணுவ ஆய்வாளர்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்.
சர்வதேசத் தடைகள் காரணமாக ரஷ்யாவால் இந்த அமைப்பை முழுமையாக உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு ஸ்டெல்த் விமானத்தை ரேடாரில் காண்பதற்கும், அதனைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளியை ரஷ்யா எப்படிச் சமாளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனாலும், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பென்டகன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





