பொம்மைக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள்! முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாகக் கடத்தி வரப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (08.04.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கொரியர் மூலம் வந்த ஒரு கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் சோதனையின் போது கண்டறியப்பட்டது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (D.C.D.B) அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகச் செயற்பட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து போதைப்பொருள் மாத்திரமன்றி, அதனை அளவிடப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு, 2 நவீன கைப்பேசிகள் மற்றும் பெருந்தொகையான பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகளிலும் பொலிஸார் மேலதிக சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.





