சர்வதேச நாணய நிதியத்தின் சொல்லுக்கு ஆடாதீர் – அநுர அரசுக்கு சஜித் வழங்கிய முக்கிய ஆலோசனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், உள்நாட்டுத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இன்று (09.04.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், IMF நிபந்தனைக்காக ‘செஸ்’ (Cess) வரியை நீக்க அரசு எடுக்கும் முயற்சியானது, உள்நாட்டு உற்பத்தியாளர்களை முழுமையாக நடுத்தெருவில் நிறுத்தும் எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் 52 சதவீதப் பங்களிப்பை வழங்கும் நடுத்தரத் தொழில்முனைவோர் கடும் நெருக்கடியில் உள்ளதாகத் தெரிவித்த சஜித், இலங்கையில் இருந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களான பிரண்டிக்ஸ் (Brandix) மற்றும் மாஸ் (MAS) போன்றவை தற்போது இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இதனால் இலங்கையில் பல இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
“பராட்டே சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கடன் சுமையில் சிக்கியுள்ள தொழில்முனைவோருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை” எனச் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
குறைந்தபட்சம் அவர்களுக்கான கடன் மறுசீரமைப்பு (Debt Restructuring) கூடச் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், சர்வதேச நிதியத்தின் சொற்கேட்டுச் செயல்படுவதை விடுத்து, எமது நாட்டின் தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





