புத்தாண்டு கொண்டாட்டத்தில் நேர்ந்த கொடூரம்! தனியார் பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.04.2026) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 6 மணியுடன் பல்கலைக்கழக நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் குழுவொன்று இரவு நேரத்தில் தனியார் விருந்து ஒன்றைத் தனியாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருந்தின் போதே மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அவருக்குப் பின்னால் மற்றொரு மாணவன் செல்வதைக் கண்ட உயிரிழந்த மாணவர், அது குறித்துக் கேள்வி எழுப்பியதுடன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் ஒன்றுதிரண்டு, பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவரை ஹோட்டல் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணையில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



