சிங்கள – தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமையட்டும் – ஜனாதிபதி அநுர
பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய ஆண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த விழா பௌதீக மற்றும் ஆன்மீக மாற்றங்களை குறிக்கும் முக்கிய கலாசார நிகழ்வாகும் என அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய சடங்குகள், சுபநேரங்கள் மற்றும் சமயக் கிரியைகள் வழியாக, அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழா, நாட்டின் அடையாளத்தையும் சமூகங்களுக்கிடையிலான கலாசார பிணைப்பையும் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பாதை இந்தப் பெறுமதியான கலாசாரம் மற்றும் வரலாற்று மரபுகளுடன் இணைந்தே அமைய வேண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் அந்த மரபுரிமைகள் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
புத்தாண்டு காலத்தில் வெளிப்படும் கூட்டுப்பண்பு, பகிர்வு, மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற மதிப்புகள் சில நாட்களுக்கு மட்டுமன்றி முழு ஆண்டும் எமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களையும், வெளிநாட்டு சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டதுபோல், இனியும் நாடாக ஒன்றுபட்டு சவால்களை சமாளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதுடன், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.





