டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் அநுர புத்தாண்டு கொண்டாட்டம்
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘டித்வா’ (Dithwa) சூறாவளியினால் சேதமடைந்து, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அநுராதபுரம் – கல்நேவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளி ஒருவரின் புதிய வீட்டில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
சித்திரை புத்தாண்டுச் சுபநேரச் சடங்குகளில் அந்தப் பிரதேச மக்களுடன் இணைந்து கலந்துகொண்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கையளித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள முகநூல் பதிவில், சூறாவளியால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாதங்களுக்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கல்நேவ பகுதியில் முழுமையாகச் சேதமடைந்த 6 வீடுகளும், பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் கட்டியெழுப்பப்படும் மக்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





