இஸ்ரேல் – லெபனான் இடையே இன்று நேரடிப் பேச்சுவார்த்தை!
இஸ்ரேலுடன் இன்று நடைபெறவுள்ள நேரடிப் பேச்சுவார்த்தையில், உடனடி போர்நிறுத்தத்தை எட்டவே லெபனான் முன்னுரிமை அளிக்கும் என அந்த நாட்டு உயர் அதிகாரி ஒருவர் அல் ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கான லெபனான் தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆணை, போர்நிறுத்தம் குறித்துப் பேசுவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அமர்வு ஒரு ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நேரடியாகப் பங்கேற்பது, இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வழங்கும் பாரிய ஆதரவைக் காட்டுகிறது.
லெபனானின் நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் ஆக்கபூர்வமாக உள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.





