சிறுவர்களுடன் இணைந்து பிரதமர் ஹரிணி புத்தாண்டு கொண்டாட்டம்!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கலாசார விழாவினை முன்னிட்டு, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, கம்பஹாவில் உள்ள இல்லம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார விழாவில் பங்கேற்ற பிரதமர், சுபவேளையில் மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பிரதமரின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் சிறுவர்களுடன் இணைந்து உற்சாகமாக ஈடுபட்ட பிரதமர், ‘கல்வி கற்கும்’ சுபவேளையில் சிறுவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் வழிகாட்டி அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசி வழங்கினார்.
பின்னர் கைவிசேடம் மற்றும் உணவு உண்ணும் சடங்குகளில் பங்கேற்ற பிரதமர், நாட்டின் சவால்களை முகாமைத்துவம் செய்ய ஒத்துழைப்பு வழங்கிய உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.





