பழிவாங்கல் நாடகத்தை அரங்கேற்றும் அரசு – சிரித்தபடி கோபமாக பேசிய நாமல் ராஜபக்ஷ
மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நேரில் சந்தித்த நாமல் ராஜபக்ச, அவரது நலன் குறித்து விசாரித்தார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கவே அரசியல்வாதிகளைச் சிறையிலடைக்கும் பழிவாங்கல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தினார்.
“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம், தமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையைத் தவறாகப் பயன்படுத்துகிறது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வரும் வேளையில், அவற்றைத் தீர்க்க முடியாத அரசாங்கம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய கைதுகளை முன்னெடுப்பதாக நாமல் குறிப்பிட்டார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மிகவும் உறுதியான மனநிலையில் உள்ளதாகவும், இவ்வாறான சவால்கள் தமக்குப் புதியவை அல்ல என்றும் அவர் கூறினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைத் தாம் மதிப்பதாகவும், நீதிமன்றத்தின் மூலம் உரிய நீதி கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.





