ஓமன் கடலில் ஈரானிய கப்பல் சிறைபிடிப்பு! அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையை ‘கடல் கொள்ளை’ எனச் சாடிய ஈரான்
ஈரானிய வணிகக் கப்பலான ‘டூஸ்கா’ அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டதை ஈரானின் ஹஸ்ரத் கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக அமெரிக்கப் படைகளைத் தாம் விரட்டியடித்ததாக ஈரானிய ஊடகங்கள் கூறி வந்த நிலையில், தற்போது கப்பல் பறிபோனதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஓமன் கடல் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பலை அமெரிக்கா சட்டவிரோதமாகக் கைப்பற்றியதை ‘ஆயுதமேந்திய கடல் கொள்ளை’ என ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளையும், தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்திற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், ஓமன் வளைகுடா மற்றும் உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படையும் அப்பகுதியில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.





