ஈரானுடனான போர் நிறுத்தம் காலவரையறையின்றி நீடிப்பு! பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளுக்கு ட்ரம்ப் இணக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் வேண்டுகோளை ஏற்று, போர் நிறுத்தத்தைக் காலவரையறையின்றி நீடிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.
ஈரானியத் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை, அமெரிக்கப் படைகளின் தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பை ‘அமெரிக்காவின் தந்திரம்’ என ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையே ஒரு இராணுவ ஆக்கிரமிப்புதான் என்றும், இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானியப் பாராளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் மெஹ்தி முகமதி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், அமைதி முயற்சிகளுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கியதற்காக ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





