தர்பூசணிக்காக எழுந்த சண்டை ; தொழிலதிபர் உள்ளிட்ட குழுவினர் செய்த மோசமான செயல்
கண்டி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 12-ஆம் திகதி தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், தாம் சாப்பிட்ட தர்பூசணிப் பழத்தின் தோல் பகுதியை அருகிலிருந்த காணிக்குள் வீசியுள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் தலைமையிலான ஒரு கும்பல், அந்த ஹோட்டலுக்குள் புகுந்து சுற்றுலாப் பயணிகள் மீதும், அவர்களைப் பாதுகாக்க முயன்ற ஹோட்டல் பாதுகாப்பு ஊழியர்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு சிறிய விவகாரத்திற்காக இவ்வளவு மோசமான முறையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலதிபரின் செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செல்வாக்கு மிக்க தொழிலதிபர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஹோட்டல் நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடப்பது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.




