மே 1 முதல் அமுலாகும் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை
தேசிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் வாகன உரிமையாளர்கள் தங்களது காப்புறுதி விபரங்களை பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக, மிக இலகுவாகத் தங்களது கையடக்கத் தொலைபேசிகள் ஊடாகவே டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பொலிஸ் சோதனைகளின் போது காப்புறுதி விபரங்களை மிக விரைவாகச் சரிபார்க்க முடியும் என்பதால், வீதிப் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாஸ்டிக் அட்டைகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பிற்கும் இது பெரும் பங்களிப்பு வழங்கும்.
இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, காப்புறுதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியன இணைந்து இந்த நவீன நடைமுறையைச் செயற்படுத்தவுள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரமும் பெருமளவில் மீதமாகும்.




