மண்சரிவு அபாயம்! – 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை; சீரற்ற வானிலையால் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரிவுகளுக்கும் முதற்கட்டமாக ‘கவனமாக இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பின் சீதாவக்க, பாதுக்க பிரிவுகள், கம்பஹாவின் அத்தனகல்ல, களுத்துறையின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்த பிரிவுகள், கேகாலையின் புலத்கொஹுபிட்டிய, நுவரெலியாவின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரியின் பெல்மடுள்ள, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘விழிப்புடன் இருக்குமாறு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நாடு முழுவதும் 28,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.





