வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி பூபாலசிங்கம் ஜெயகுமார் தற்கொலை
யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதியான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்பவர், இன்று காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்துக் கொழும்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் இவருக்கான மரண தண்டனைத் தீர்ப்பை அண்மையில் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பினை அதிகாரப்பூர்வமாக வாசித்துக் காட்டுவதற்காக, இவர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, கொழும்பிலிருந்து நேற்று முன்தினமே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் ஜெயகுமார், இன்று அதிகாலை சிறை அறையினுள் திடீரெனத் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




