ஈரான் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
ஈரானின் முக்கிய இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, உலக வர்த்தகத்தின் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அச்சுறுத்தலாக உலா வந்த ஈரானின் நான்கு ‘ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை’ (One-Way Attack Drones) தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான ‘சென்ட்காம்’ (CENTCOM) அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் போது ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்தை ஈரானும் ஓமானும் கூட்டாக நிருவகிக்கும் என்ற அமைதி உடன்படிக்கையின் முக்கியப் பகுதியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அதிரடியாக நிராகரித்தார்.
அந்த சர்வதேசக் கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்கும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையும் கடல் கண்ணிவெடிகளை விதைக்க முயன்ற ஈரானியப் படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா “தற்காப்புத் தாக்குதல்களை” நடத்தியிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா வேண்டுமென்றே மீறுவதாக ஈரான் தற்பொழுது உலக அரங்கில் குற்றம் சுமத்தியுள்ளது.




