போர் நிறுத்த விவகாரத்துக்கு மத்தியில் மொஜ்தபா கமெனி வெளியிட்ட செய்தி
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி, இராணுவ தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிரான நாட்டின் எதிர்ப்பு, அந்த நாடுகளின் பலவீனத்தையும் அவமானத்தையும் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா மற்றும் சீயோனிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானிய இராணுவம் காட்டிய வீரம், எதிரிகளின் சதித்திட்டங்களைத் தவிடுபொடியாக்கியுள்ளது” என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி, ஈரானிய இராணுவத்தின் மீது எதிரிகளால் திணிக்கப்பட்ட பலவீனமான காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கமேனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரானைத் துண்டாட நினைத்த பிரிவினைவாதிகள் மற்றும் அமெரிக்காவின் தீய திட்டங்களுக்கு எதிராக இராணுவம் உறுதியுடன் நின்று நாட்டைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் புகழ்ந்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறைமையைத் தற்காப்பதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது எனத் தெரிவித்த அவர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.





