பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு! – பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு!
இன்று திங்கட்கிழமை (23.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இதுவரை 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் பாண் ஒன்றின் புதிய விற்பனை விலை 130 ரூபாவாக அமையும் என அந்தச் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாண் மாத்திரமன்றி, ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் தலா 10 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் அன்றாட உணவாகக் கருதப்படும் பாண் விலையும் உயர்த்தப்பட்டுள்ளமை நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





