நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது பேருந்து கட்டணம் – வெளியாகிய தகவல்
இன்று (23.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி, இதுவரை 27 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் இனி 30 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்துக் கட்டணங்களை 15 சதவீதத்தினால் உயர்த்த வேண்டுமெனத் தனியார் பேருந்து சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நேற்றிரவு முதல் பல தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகியிருந்தன.
இதனால் இன்று காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பேருந்துகள் இன்றிப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதோடு, இயங்கிய சில பேருந்துகளிலும் கடும் நெரிசல் காணப்பட்டது.
எரிபொருள் விலை உயர்வு பேருந்துக் கட்டணங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே கட்டணம் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது




