யாழ்ப்பாண விதை உருளைக்கிழங்கில் கமிஷன் – நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் டக்ளஸ்
யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த விதை உருளைக்கிழங்கு விவகாரத்தில் கமிஷன் நடந்தமைக்கான சாத்திய கூறுகள் அதிகம் தென்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் விவசாய நவீன மாக்கல் செயற் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் குறித்த விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை பக்ரீரியா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது .
குறித்த கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டதில் தரகு பணம் கைமாறப்பட்டமை தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான பல விடயங்கள் இடம் பெற்றுள்ளமையை அறிகிறேன்.
குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமல்லாது குறித்த விதை உருளைக்கிழங்கை இறக்குமதி செய்தவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.