அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு! எரிந்த நிலையில் காணப்படுவதால் சந்தேகம்
வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணி ஒன்றில், மிகவும் உக்கிய நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை காவல்துறையினர், முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒருவருடையதாக இது இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தாலும், அந்த எலும்புக்கூடு எரிந்த நிலையில் காணப்படுவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்திற்கு விரைந்த நீதிபதி, மரண விசாரணை அதிகாரி மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
மேலதிக பரிசோதனைகளுக்காக இவை யாழ் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று அறிக்கை கிடைத்த பின்னரே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





