ராஜபக்ஷர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு: நாமல் சவால்
ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை, குறிப்பாக தமது கட்சி உறுப்பினர்களை, தவறான முறையில் குறிவைப்பதாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் தெற்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்கள் சுங்கத்திலிருந்துதான் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும், எனவே இதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சொல்வது உண்மையா, அல்லது பொலிஸ்மா அதிபர் சொல்வது உண்மையா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தேர்தல் மேடைகளில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. தற்போது போதைப்பொருள் விவகாரத்திலும் இதே போன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, வெறுமனே குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.





