கிளிநொச்சியில் விவசாயிகள் ஆவேசம்! எம்பி அர்ச்சுனாவின் கொடும்பாவி எரிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இரணைமடு கமக்காரர் அமைப்புகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டானது விவசாயிகளின் கௌரவத்தைப் பாதிப்பதாகக் கூறி, கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் 28 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அர்ச்சுனா எம்பி மற்றும் விவசாய அமைப்புகளுக்கு எதிராகச் செயற்படும் இருவரின் கொடும்பாவிகளை விவசாயிகள் பகிரங்கமாக எரித்துத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்தி, அவற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என விவசாயிகள் இதன்போது சவால் விடுத்தனர். இந்தப் போராட்டத்தினால் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தின் இறுதியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்ற விவசாயிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்டச் செயலரிடம் கையளித்தனர்.
இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், விவசாயிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த எம்பி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





