எரிபொருள் சிக்கல்! பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போதைக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என கல்விப் பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் பரீட்சை அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படாது என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் பாவனையைக் குறைக்கும் நோக்கில், அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை (25.03.2026) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தில் மேலதிக வகுப்புகள் அல்லது தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஒரு நாள் விடுமுறை மாணவர்களின் பாடத்திட்டப் பூர்த்தி அல்லது கல்விச் செயற்பாடுகளைப் பாதிக்காது என அமைச்சின் உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய எரிசக்திச் சேமிப்புக் கொள்கைகளுக்கு இணங்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பரீட்சை எழுதும் மாணவர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றித் தமது தேர்வுகளுக்குத் தயாராகலாம் எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை மையங்கள் மற்றும் நேர அட்டவணைகள் எவ்வித மாற்றமும் இன்றித் தொடரும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.





