காணிகளுக்கான முழு உரிமையை வழங்கும் ‘ஹிமிகம’ தேசியத் திட்டம் இன்று ஆரம்பம்
விவசாய சமூகத்தின் நீண்டகால எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், காணிகளுக்கான முழுமையான உரிமையை வழங்கும் ‘ஹிமிகம’ தேசியத் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனுராதபுரம் கொரகஹவெவ பகுதியில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் இந்த விசேட நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விவசாயிகளுக்கு ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரங்களை நேரடியாக வழங்கி வைத்தார்.
இதுவரை அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்கள் ஊடாகக் காணிகளைப் பயன்படுத்தி வந்த மக்களுக்கு, இனி அந்தக் காணிகள் முழுமையான உரிமையுடன் சொந்தமாகும் என்பதை உறுதிப்படுத்தினார். இதன்போது பயனாளி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த நிலங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரான பிள்ளைகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பரிணாமம் குறித்துப் பேசிய ஜனாதிபதி பின்வரும் முக்கிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்:
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமானது.
முறையான ஆய்வுகளுக்குப் பின்னர், புதிய பொருளாதார உத்திகளுக்கு அமைய ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களை உள்வாங்கி, நவீன பொருளாதார மாற்றத்தை இந்நாட்டிற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.













