மகிழ்ச்சியுடன் நரகத்தை விட்டு வெளியேறுவேன்! – மைத்திரி வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.
தனது தற்போதைய அதிகாரபூர்வ வீடு எந்தவித வசதிகளும் இன்றி நரகத்தைப் போல் இருப்பதாகவும், எனவே அதனை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், புதிதாக ஒரு வீட்டை கண்டுபிடித்துள்ளதாகவும், ஆனால் அதில் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் இன்னும் சில நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய உத்தியோகபூர்வ வீட்டில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளதால், மூன்று பிள்ளைகளில் இருவர் வந்தால் அவருக்கு தங்க இடமிருக்காது என்றும் கூறப்படுகிறது.
மேலும், தனக்கு தற்போது ஓய்வூதியம் மட்டுமே வருமானம் என்றும், வீடு காலி செய்ய முடிவு செய்தபோது பலர் வீட்டுவசதி வழங்க முன்வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியில் இந்த வீட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்படைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.





