மஹிந்த ராஜபக்சவின் கணக்கில் 930 பில்லியனா? – சி.ஐ.டி.யில் மொட்டுக் கட்சியினர் அதிரடி முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான 8 வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
மொட்டுக் கட்சியின் இளைஞர் முன்னணியினர் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, இந்தத் திட்டமிட்ட அவதூறுப் பரப்புரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைதளக் கணக்குகளின் ஊடாகவே இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகச் செயற்குழு உறுப்பினர் பசன் கஸ்தூரி உள்ளிட்டோர் இதன்போது குற்றம் சுமத்தினர்.
முன்னாள் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.





