ஈரானிய அரசு வானொலி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்! பந்தர் அப்பாஸ் நகரில் பதற்றம்
ஈரானின் தெற்கு கடற்கரையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள அரசு வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், உயிரிழந்தவர்களில் 214 பேர் அப்பாவிச் சிறுவர்கள் என்பது உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு மிக அருகாமையில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரை இஸ்ரேல் குறிவைத்துள்ளமையானது, அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் கடல்சார் அதிகாரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானியப் புரட்சிகரக் காவல் படையினர் (IRGC) இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவத் தயாராகி வருவதால், மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.



