ஈரான் மீதான போர்நிறுத்தத்தை ஆதரித்தாலும் லெபனானுக்குப் பொருந்தாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலகிற்கு ஈரான் ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்யும் அமெரிக்காவின் முயற்சிகளுக்குத் துணையாக இருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்ப்பதே எமது இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார்.
இருப்பினும், இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் லெபனானை எவ்விதத்திலும் உள்ளடக்காது என நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவதற்கான அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பின்னால் இஸ்ரேல் முழுமையாக நிற்கும் எனத் தெரிவித்த நெதன்யாகு, பாதுகாப்பு விவகாரங்களில் தங்களது இலக்குகளை அடைவதில் எவ்வித சமரசமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.





