பிரான்ஸில் துணை மேயராகப் பதவியேற்றார் யாழ் யுவதி! 25 வயதில் சாதனை படைத்த ஆதித்யா ஆனந்தராசா
பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா (Aditya Anantharasa) நேற்று (23.03.2026) உத்தியோகபூர்வமாகத் துணை மேயராகப் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவர், இளம் வயதிலேயே அரசியலில் கால்பதித்து இன்று இந்தப் பாரிய இலக்கை எட்டியுள்ளார்.
அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆதித்யா, தனது 19ஆவது வயதிலேயே நகரமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டதன் பலனாகத் தனது 25ஆவது வயதிலேயே துணை மேயர் என்ற கௌரவமான பதவியை அவர் அடைந்துள்ளார்.
ஆதித்யா ஆனந்தராசாவின் இந்த அசுர வளர்ச்சி, புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு மட்டுமன்றி, அரசியலில் ஈடுபட விரும்பும் உலகெங்கிலும் உள்ள இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.





