ட்ரம்ப்பின் அறிவிப்பை மீறி ஈரானில் எரிவாயு நிலையங்கள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்!
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரானின் இரண்டு முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் ஒரு குழாய்வழி மீது அமெரிக்க – இஸ்ரேலியப் படைகள் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளன.
மத்திய ஈரானின் இஸ்பஹான் (Isfahan) நகரில் உள்ள காவே தெருவில் அமைந்துள்ள எரிவாயு நிர்வாகக் கட்டடம் மற்றும் எரிவாயு அழுத்த ஒழுங்குமுறை நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களால் குறித்த எரிசக்தி வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதேவேளை, நாட்டின் தென்மேற்கில் உள்ள கோர்ரம்ஷாஹர் (Khorramshahr) மின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்லும் பிரதான எரிவாயுக் குழாயையும் இந்தத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளன.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க எதிரிகளால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விவரித்துள்ளன.
தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தனது போர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பா அல்லது இஸ்ரேல் தன்னிச்சையாக இந்தத் தாக்குதலை நடத்தியதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.





