கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்துப் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருக்குமரனின் இந்தச் சாதனையைத் தொடர்ந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் அவரது இல்லத்திலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.





