வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும் முயற்சிகளை வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாகாண சபையொன்று இல்லாத காலப்பகுதியில் உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சரது நிறைவேற்றுக் கடமைகளையும் ஆற்றிவரும் ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்கள் சபைகள் இல்லாத காலங்களிலும் இடையறாத பொதுமக்கள் சேவைகளை வழங்க வேண்டும் .
இதற்காக மாநகர ஆணையாளரும் சகல சபைகளின் செயலாளர்களும் மிகக் கவனமாகப் பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ள ஆளுநர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களிடமிருந்து கூடுதலான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபை வருமானங்கள் குறித்து சபை செயலாளர்களுக்கு இலக்குகள் வழங்கப்பட்டு அவர்களது வருடாந்த செயலாற்றுகை மதிப்பிடலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களின் ஆய்வு உத்தியோகத்தர்கள் சபைகளின் செலவினங்கள் தொடர்பான கண்காணிப்புக்காகவும் அறிக்கையிடலுக்காகவும் தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்கள்.
அத்துடன் சகல உள்ளூராட்சி மன்றங்களின் தினசரி வருமான செலவீனங்கள் இணைய மூலம் கணக்காய்வு செய்யவுள்ளார்கள்.
சபைகளின் காலாந்தரமான வருமான செலவின பகுப்பாய்வுகள் கணனிமயப்படுத்தப்படும்.
சபைகள் தங்களது மூலதன மற்றும் நானாவித செலவினங்களை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதீட்டுக்கு இணங்க மேற்கொள்வது கண்காணிக்கப்படும்.
வெளிநாட்டு நிதி வழங்கலுடனான செயற்றிட்டங்கள் ஆளுநரின் நெருங்கிய கண்காணிப்புக்குட்படுத்தப்படும்.
சபைகள் தங்களது வருமான மிகைகளிலிருந்து நிதி தேவைப்படும் சபைகளுக்கு இலகு கடன்கள் பெறுவது வசதிப்படுத்தப்படும்.
மாகாண சபைக்குச் சொந்தமான திருத்தம் செய்யவேண்டிய வாகனங்கள் சபைச் செலவினத்தில் திருத்தப்பட முடியுமானால் அச் சபைகள் அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
இடையறாததும் விரைவான சேவை வழங்கலுக்காகவுமாக உள்ளூராட்சித் திணைக்களத்துக்குள்ளான ஆளணிப் பரம்பல் சீராக்கப் பொறிமுறையொன்று வகுக்கப்படும்.
எல்லாச் சபைகளுக்கும் மாதத்தில் ஓர் பொதுவான நாள் குறிக்கப்பட்டு அந்நாளில் திறந்த அபிருத்திக் கலந்துரையாடலுக்காக
பொதுமக்கள் அழைக்கப்படுவார்கள்.
அதில் வசதிப்படுத்துநர்களாக வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருப்பார்கள்.
மாகாண உள்ளூராட்சி அமைச்சும் மாகாண வருமானத் திணைக்களமும் இணைந்து சபைகளின் வருமானங்களை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநருக்குப் பிரேரணைகளை முன்வைக்கும்.
மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி ஆணையாளரும் இரு மாதங்களுக்கு ஒரு தடவை மேற்படி விடயங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவார்கள் என ஆளுநர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.