தேசிய பாதுகாப்பு தினத்தில் மஹிந்தவுக்கு அழைப்பிதழ் வரவே இல்லை – சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது சட்டத்தரணி மனோஜ் கமகே உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் உபாலி பன்னிலகே வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
இந்த நினைவுத் தின நிகழ்வில் திட்டமிட்டு மஹிந்த ராஜபக்ஷ தவிர்க்கப்படுகிறாரா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய சட்டத்தரணி மனோஜ் கமகே, “புதிய அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்வதற்கான எந்தவொரு அழைப்பிதழும் முன்னாள் ஜனாதிபதிக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
அரசியல் லாபங்களுக்காகவும், உண்மை நிலையை மூடிமறைக்கவும் அமைச்சர் உபாலி பன்னிலகே போன்றவர்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது” என மிகக் காரசாரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.





