மக்களின் கார் வாங்கும் கனவை அரசு எப்போது நிறைவேற்றும்? – நாடாளுமன்றத்தில் கேள்விகேட்ட சஜித்!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முரண்பாடான கொள்கைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.
“மத்திய கிழக்கு நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களால் எரிபொருட்களின் விலையை மேலும் அதிகரிக்க நேரிடலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கூறியுள்ளார்.
ஆனால், மறுபுறம் நாட்டின் திறைசேரி தற்போது பணத்தால் நிரம்பி வழிவதாக இதே ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர்.
பின்னணி இப்படியிருக்க, மக்களின் சுமையைக் குறைக்க ஏன் எரிபொருள் விலையை உங்களால் குறைக்க முடியவில்லை?” என சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுங்கட்சியினர் கடந்த காலங்களில் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களின் போது, 12 லட்சம் ரூபாவிற்கு சாதாரண மக்கள் கார் ஒன்றை கொள்வனவு செய்யக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனக் கூறியிருந்ததை சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
“இந்த நாட்டின் நடுத்தர வர்க்க மக்களின் கார் வாங்கும் கனவை இந்த அரசாங்கம் எப்பொழுது நிறைவேற்றப் போகின்றது? வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் எப்போது முழுமையாக நீக்கப்படும்?” என்றும் அவர் நாடாளுமன்றத்தில் காரசாரமாகக் கேட்டுள்ளார்.



