தங்காலையில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்ற எண்ணெய் தேய்க்கும் சுப விழா!
சித்திரை புத்தாண்டின் எண்ணெய் தேய்க்கும் சடங்கு இன்று காலை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வுகளில் ஒன்றாக, தங்காலை பொலொம்முருவ ஸ்ரீ புஷ்பாராம விகாரையில் நடைபெற்ற விழாவில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட தர்ம வகாச்சாரியாரும், தங்காலை சாசனாரட்சக பலமண்டலத்தின் தலைவருமான அதிவணக்கத்திற்குரிய யடிகல பஞ்ஞாலோக்க நாயக்க தேரரின் வழிகாட்டலில் இந்தச் சடங்கு பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
சுப நேரத்தில் யடிகல பஞ்ஞாலோக்க தேரர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வாதம் வழங்கினார்.
இதன்போது விகாரையில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களுடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
நாட்டின் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் விகாரை வழிபாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






