கொலம்பியாவில் 110 வீரர்களுடன் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!
கொலம்பிய இராணுவத்திற்குச் சொந்தமான ‘லாக்கீட் மார்டின் ஹெர்குல்ஸ் சி-130’ ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென் கொலம்பியாவின் அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
பெரு எல்லைக்கு அருகாமையில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது, விமானத்தில் 110 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்துக் கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்டை நாடான பொலிவியாவிலும் இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது கொலம்பியாவிலும் இவ்வாறானதொரு பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.





