தவறுகள் நடந்திருக்கலாம்.. அவற்றை ஏற்றுக்கொள்கிறோம்! – தவறுகளைத் திருத்தி முன்னேறத் தயார் நாமல் ராஜபக்ஷ
கடந்த காலங்களில் எமது தரப்பிலிருந்து தவறுகள் நடந்திருக்கலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “தவறுகள் நடப்பது மனித இயல்பு; ஆனால் அந்தத் தவறுகள் என்ன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே முக்கியம்” எனத் தெரிவித்தார்.
கல்வி கற்பதும், எமது கலாசாரங்களைப் பாதுகாப்பதும் இத்தகைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்காகத்தான் என அவர் சுட்டிக்காட்டினார்.
தனிநபராக மாத்திரமன்றி, ஒரு நாடாகவும் குடிமக்களாகவும் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நாமல், எதிர்காலத்தில் பிழைகளைத் தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.





