கண்டியில் ஜனாதிபதி அநுர தலைமையில் எண்ணெய் தேய்க்கும் அரச விழா!
2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இன்று காலை 6.55 மணிக்கு உதித்த சுப நேரத்தில், அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், ஜனாதிபதிக்கு முறைப்படி எண்ணெய் தேய்த்து ஆசீர்வாதம் வழங்கினார்.
மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தமது நல்லாசிகளை வழங்கினர்.
முன்னதாக தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, சடங்குகள் நிறைவடைந்த பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே நேரில் சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறிந்தார்.
ஜனாதிபதியை நேரில் கண்ட மக்கள், அவருக்குத் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் மற்றும் மகா சங்கத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புத்தாண்டின் இந்த சுப ஆரம்பம் நாட்டிற்குச் சௌபாக்கியத்தைத் தரும் என ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.





