நெதன்யாகு தோற்றுவிட்டார் – எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு – அதிர்ந்து போயுள்ள இஸ்ரேல் அரசியல் களம்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகப் பிரதமர் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் (Yair Lapid) அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“அரசியல் ரீதியாகவும், உத்தி ரீதியாகவும் (Strategically) நெதன்யாகு தோற்றுவிட்டார்” என அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
எமது நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது, இஸ்ரேல் அந்த மேசையில் கூட அமர்த்தப்படவில்லை என்பது தேசிய அவமானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் தமக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்த போதிலும், அரசியல் தலைமைத்துவம் அந்த வெற்றியைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக லபிட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத மிரட்டலைத் தடுப்பது மற்றும் ஹிஸ்புல்லாவை முடக்குவது போன்ற நெதன்யாகுவின் எந்தவொரு முக்கிய இலக்கும் இந்தப் போர்நிறுத்தத்தால் அடையப்படவில்லை எனவும், மாறாக ஈரானுக்கு மீண்டெழவே இது வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



