ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்காக மட்டும் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம்
இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகத் தமிழ் மக்கள் நம்பும் நிலையில், அரசாங்கம் அந்த எண்ணிக்கை வெறும் 2,764 எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளதாகச் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
சர்வதேச அமைப்புகளின் கணக்கீட்டின்படி இந்த எண்ணிக்கை 70 ஆயிரத்திற்கும் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் தரவுகள் பாதிக்கப்பட்ட மக்களைக் கேலி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
செம்மணி அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஏன் சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பிய சாணக்கியன், உள்நாட்டுப் பொறிமுறைகளைத் தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவப் பின்னணியைக் கொண்டவர்களே விசாரணை நடத்தி இழப்பீடு வழங்கப் போவதாகக் கூறப்படுவது நீதியை எள்ளி நகையாடும் செயல் என அவர் சாடினார்.
ஊழலை ஒழிக்க மாத்திரம் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கறுப்புக் கொடி ஏந்தியதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டனர் என நீதி அமைச்சரிடம் நேருக்கு நேராகத் தெரிவித்தார்.





