ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கும் ரஷ்யா! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கை
ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு முக்கியமான இராணுவ உளவுத் தகவல்களை வழங்கி வருவதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஒலெஹ் இவாஷ்சென்கோவுடன் (Oleh Ivashchenko) நடத்திய விசேட சந்திப்பிற்குப் பின்னர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா தனது மின்னணு உளவுத் திறன்களைப் (Signals intelligence) பயன்படுத்தி சேகரிக்கும் தகவல்களை ஈரானுக்குத் தாரைவார்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய உளவுத்துறை ஒத்துழைப்பானது மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போரை மேலும் நீட்டிக்கவும், தீவிரப்படுத்தவும் வழிவகுக்கும் என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யா தனது சொந்தத் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு உளவுத் திறன்களைப் பயன்படுத்திச் சேகரிக்கும் தரவுகளுடன், மத்திய கிழக்கில் உள்ள சில பங்காளிகளிடம் இருந்து பெறப்பட்ட இரகசியத் தகவல்களையும் ஈரானுக்கு வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே மார்ச் 15 அன்று வழங்கிய நேர்காணலில், ரஷ்யா ஈரானுக்கு ‘ஷாஹெட்’ (Shahed) வகை ட்ரோன்களை வழங்கியுள்ளதாகவும், அவை அமெரிக்கத் தளங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ உறவு ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.





